கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 
ஆன்மிகம்

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது

ஏழுமலையானுக்கு சூடக்கூடிய பூமாலையை, கூடையில் வைத்து அர்ச்சகர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா 22-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

முதல் நாளான நேற்று காலையில் ஆச்சாரிய ருத்வின்யம் நிகழ்ச்சியும் மாலையில் அங்குரார்ப்பண பூஜையும் நடந்தது. இந்த பூஜையை திருப்பதியில் இருந்து வந்திருந்த ஆகம ஆலோசகர் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.

முன்னதாக திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகர் மற்றும் அர்ச்சகர்கள் திருப்பதி குடையுடன் மேளதாளம் முழங்க வரவேற்று கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

ஸ்நாபன திருமஞ்சனம்

2-ம் திருநாளான இன்று காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. யாக சாலை பூஜை நடத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகர் தலைமையிலான 7 அர்ச்சகர்களும் திருப்பதி குடை பிடித்து மாடவீதி வழியாக கோவில் மூலஸ்தானத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் ஏழுமலையானுக்கு சூடக்கூடிய பூமாலையை, கூடையில் வைத்து அர்ச்சகர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது.

3-ம் திருநாளான நாளை காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும், 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு பவித்ர சமர்ப்பணம், மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது.

பவித்ர உற்சவம் நிறைவு நாள் நிகழ்ச்சிகள்

நிறைவு நாளில் காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும், 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

பின்னர் 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும், இரவு 8.30 மணிக்கு பூர்ணாகுதி மற்றும் சிறப்பு மணி ஒலியுடன் விசேஷ பூஜையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து பகுமானம் அர்ச்சனையும் வெங்கடாஜலபதி சுவாமியின் தலையில் அணிவிக்கப்படும் கிரீடம் மூலம் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு ஏகாந்த சேவையும் நடக்கிறது.

SCROLL FOR NEXT