சங்கரலிங்க சுவாமி கோவில் 
ஆன்மிகம்

பேய்குளம் சங்கரலிங்க சுவாமி திருக்கோவில்

பேய்குளம் சிவன் கோவிலுக்கு வந்து வழிபட்டால், தபசுக்கு சங்கரன்கோவில் சென்று வழிபட்ட நிறைவு கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் கிராமம் உள்ளது. இப்பகுதி முற்காலத்தில் இருண்ட காடாகவும், யாரும் நுழைய முடியாத அளவுக்கு நெருக்கமான மரங்கள் நிறைந்த இடமாகவும் இருந்தது. இதனால், இந்த வழியாக வரும் வழிப்போக்கர்கள் இவ்விடத்தில் தங்குவதற்கு அஞ்சினர்.

மதிய வேளையில்கூட இவ்விடம் இருண்டு, பேய் குடிகொண்டிருக்கும் இடம் போன்று தோன்றிய காரணத்தினால் 'பேய்குளம்' என பெயர் பெற்றது. இப்பகுதியில் பஞ்ச தலங்களில் ஒன்றான கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலைக் கட்டி முடித்து விட்டு கொடிமரம் நடுவதற்காக யாகம் ஒன்றை செய்தார் வீரபாண்டிய மன்னர்.

அப்போது வேதவிற்பன்னர்கள், ஐந்து தேவதைகளை அழைத்து கொடிமரத்தில் அமர வைத்தனர். ஊர் மக்கள் கூடி கொடிமரத்தை கோவிலுக்கு எடுத்து வந்தனர். அப்போது, “எங்கள் ஊருக்கு காவல் தெய்வமாக இந்த தேவதைகள் வர வேண்டும்” என்று பக்கத்து ஊர் மக்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு, அவர்கள் அந்த தேவதைகளை அழைத்துப் போய் தங்கள் ஊர்களில் காவல் தெய்வமாக குடிவைத்துக் கொண்டார்களாம்.

கட்டாரிமங்கலம், அம்பலச்சேரி, புளியங்குளம், கருங்கடல், பேய்க்குளம் ஆகிய ஐந்து கிராமங்களில் அந்த தேவதைகள் குடிபுகுந்தன. அதன்பிறகு வேதவிற்பன்னர்கள் அந்த தேவதைகளை கொடிமரத்துக்கு கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அந்த தேவதைகள் கொடிமரத்திற்கு வர மறுத்தனர். தங்களை விரும்பி அழைத்த மக்களின் ஊருக்குச் சென்று, அந்த ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக அமர்ந்து கொண்டனர். இதனால் தேவதையில்லா கொடிமரத்தை கோவிலில் நாட்டவில்லை.

தேவதைகள் குடிகொண்ட இடமானதால் இவ்வூர், காடு அழிந்து நகரமாக மாறியது. தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பாத யாத்திரையாக செல்வது வழக்கம். எனவே, அவர்கள் தங்குவதற்காக வழிநெடுகிலும் அன்னதான சத்திரங்கள் அமைத்தனர்.

பொதிகைமலை அடிவாரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாத யாத்திரீகர்கள் தங்குவதற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்த்தாண்டன் என்ற ஒரு சிவபக்தர், பேய்குளம் பகுதியில் ஒரு மடம் அமைத்தார். அதில் சில பசுக்களையும் பராமரித்து வந்தனர். அதனால் இந்த மடம் 'பசுமடம்' என்று அழைக்கப்பட்டது.

சிவனடியாருக்கு தபசு காட்சி கொடுத்த இறைவன்

பின்னாளில் இங்கு வந்து தங்கிய சிவனடியார்களில் ஒருவர் சிவபூஜை செய்து வந்தார். அவர் சிவன் மீது அதிக பிரியம் கொண்டவர். ஆண்டுதோறும் ஆடித் தபசு காட்சியை காண சங்கரன்கோவில் சென்று வருவார். வயதான காரணத்தினால் அவரால் சங்கரன் கோவில் செல்ல இயலவில்லை.

ஒரு சமயம் தபசு காலத்தில் சங்கரன்கோவிலுக்கு சென்று தபசுக்காட்சியை கண்டுகளிக்க எண்ணினார். ஆனால் அவரால் அங்கு சென்று வர இயலவில்லை. அதனால் மிகுந்த வருத்தத்தில் சங்கரலிங்க சுவாமியையும், கோமதி அம்பாளையும் நினைத்து சிவசிந்தனையில் அமர்ந்து தியானம் செய்தார். அதன் பலனாக சங்கரன்கோவிலில் நடந்த தபசுக் காட்சியானது இவ்வூரில் இருந்த அவருக்கு தெரிந்தது. இதனால் ஆனந்தம் அடைந்தார்.

சங்கரலிங்க சுவாமி- கோமதி அம்பாள்

சின்ன சங்கரன்கோவில்

தென்னகத்தில் இறைவன் தபசு காட்சி தந்த இந்த இடம் 'சின்ன சங்கரன்கோவில்' என்று எண்ணினார். இறைவனிடம், "தனக்கு காட்சி தந்தது போலவே இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காட்சி தர வேண்டும்” என்று வேண்டினார். இறைவனும் அவ்வாறே ஆகட்டும் எனக் கூறி மறைந்தார்.

அதைத்தொடர்ந்து அவர், இங்கு சுவாமி மற்றும் அம்பாளை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம்தோறும் இங்கும் ஆடித் தபசு காட்சி மிகச்சிறப்பாக நடந்தது. சங்கரன் கோவில் சென்று ஆடித்தபசு காட்சியை காண முடியாத பக்தர்கள் இங்கேயே கண்டு மகிழ்ந்தனர்.

அதன்பின், பக்தர்கள் முயற்சியில் காசி விஸ்வநாதரைப் போன்று சிறிய லிங்கத்தையும் சிவ ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்தனர். பின்னர், கருவறையில் கிழக்கு நோக்கி சங்கரலிங்க சுவாமியையும், அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி கோமதி அம்பாளையும் அமைத்தனர்.

நடராஜப் பெருமான், சிவகாமி அம்மாள், ஐம்பொன்னால் ஆன மாணிக்கவாசகர், அதிகார நந்தி ஆகியோர் காட்சி தருகிறார்கள். அதனைத் தொடர்ந்து முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், துர்க்கை அம்மன் மற்றும் பைரவர் போன்ற பரிகார தேவதைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

கோவில் பிரகாரத்தில் வேம்பு உள்ளது. அதனடியில் புற்று மற்றும் சாஸ்தா சன்னிதி உள்ளன. இவ்விடத்தில் நாகங்களுக்கு பால், பழம் படைப்பதனால் நாகதோஷம் விலகும். கோவில் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.

ஆடித்தபசு திருவிழா

இந்த கோவில் இருக்கிற இடம் 'சங்கரநயினார்புரம்' என அழைக்கப்பட்டது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

பேய்குளம் ஊரின் மேல் புறம் உள்ள பிள்ளையார் கோவிலில் அம்மன் தபசு மேற்கொள்வார். இதையொட்டி அம்மன் காலை 10.15 மணிக்கு தபசுக்கு புறப்படுவார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சீர்வரிசையுடன் அம்பாளை அழைக்க புறப்படுவார்.

அம்பாளை சங்கரலிங்க சுவாமி சென்று அழைத்து வருவது, அதன்பின் 7 மணிக்கு பேய்குளம் பஜாரில் வந்து மக்களுக்கு திருக்காட்சி தருவது மிகச்சிறப்பானதாகும். அந்த வேளையில் சுவாமி மீது, பக்தர்கள் தங்கள் பகுதியில் விளையும் கடலை, உளுந்து, பருத்தி போன்ற விளைப்பொருட்களை வீசி மகிழ்வார்கள். இதனால், அடுத்த ஆண்டு விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் ஏற்படும் என்பது நம்பிக்கை.

இரவு 8.30 மணிக்கு சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பெண்கள் மாவிளக்கேற்றி சிறப்பாக வழிபாடு செய்கிறார்கள்.

முதலில் மடமாக இருந்த கோவிலில், பின் கருவறை மட்டும் கட்டப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேகத்தின்போது இரண்டாவது பிரகாரத்தில் புதிதாக மகா மண்டபமும் அதில் கொடிமரம், நந்தி, பலிபீடம் நவக்கிரகம் மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதி, பைரவர் சன்னிதி, சாஸ்தா, பூதத்தார் திருக்கோ வில், கல்யாண மண்டபம் அமைக்கப் அமைக்கப்பட்டுள்ளன.

தபசு காட்சி

இக்கோவிலை பொறுத்தவரை, இங்கு வாழ்ந்த சித்தர், சங்கரன்கோவில் ஆடித் தபசு காட்சியை இங்கேயே மனக்கண்ணால் கண்டார் என்பது ஐதீகம். எனவே இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், தபசுக்கு சங்கரன்கோவில் சென்று வழிபட்ட நிறைவு கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

விவசாயம் மேம்படவும், நாள்பட்ட கடன் தீரவும், பிரிந்த தம்பதிகள் சேரவும், விஷ ஜந்துகளிடம் இருந்து தப்பிக்கவும் இக்கோவிலுக்கு வந்து பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

அமைவிடம்

நாங்குநேரி - சாத்தான்குளம் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் பேய்குளம் உள்ளது. திருநெல்வேலி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் இருந்து பஸ் வசதி உண்டு.