சித்ரா பெளர்ணமி திருவிழா கொடியேற்றம் 
ஆன்மிகம்

பேராவூரணி: நீலகண்டப் பிள்ளையார் கோவில் சித்ரா பெளர்ணமி திருவிழா கொடியேற்றம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 30ம் தேதி வியாழக்கிழமை மாலை நடைபெறும்.

பேராவூரணி,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகர், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், அறங்காவலர் குப்பமுத்து சங்கரன் , கோயில் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெறும். விழா நாட்களில் வண்ணமயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 30ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணியிலிருந்து 6.30 மணிக்குள் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் 10ம் நாள் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தீர்த்தவாரியும், 11ம் நாள் பகல் திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும், 12ம் நாள் விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.