சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் மாரியம்மன் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். விழாவின் சிறப்பு அம்சமாக இரவு பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெறும்.
அவ்வகையில் இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டு வைபவத்துடன் தொடங்கியது. பூக்குழி இறங்கும் பக்தர்கள் மற்றும் பிற நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர்.
விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படி உபயதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தினமும் இரவில் மாரியம்மன் பல்லக்கில் அமர்ந்து சாத்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் எட்டாம் நாளான நேற்று விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை வேளையில் சாத்தூர் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் முக்குராந்தல் பகுதியில் உள்ள அம்மன் திடலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பங்குனி பொங்கலின் சிறப்பு நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நள்ளிரவில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
பலர் கையில் குழந்தையுடனும், அலகு குத்திக் கொண்டும், பல்வேறு தெய்வங்கள் வேடமிட்டும் பூக்குழி இறங்கினர்.
பக்தர்கள் பூக்குழி இறங்குவதை பார்ப்பதற்காக சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தீயணைப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.