பூந்தமல்லி,
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் புகழ்பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. கோடை வெப்பம் தணிய வேண்டியும், கத்திரி வெயிலின் உக்கிரம் குறைந்து மழை பெய்து நாடு செழிக்க வேண்டியும், அம்மனை குளிர்விக்கும் விதமாக இந்த சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் கணபதி ஹோமமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் விஷேச பூஜைகளும் நடைபெற்றன. பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் 1,008 இளநீருடன் குமணன்சாவடி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். உடன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் எழுந்தருளி ஊர்வலமாக வந்தார்.
இந்த ஊர்வலம் கோவிலை அடைந்ததும் பக்தர்கள் கொண்டு வந்த இளநீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.