திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு தங்கக் கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடப்பது வழக்கம். அதன்படி ஆடி மாத பவுர்ணமியான நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்கக் கருட வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்ப சுவாமி, பல வண்ணமலர்களாலும், தங்கம் மற்றும் வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புராணங்களின்படி, 108 வைணவ திவ்ய தேசங்களிலும் கருட சேவைக்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், தம்மை சரணடைந்த அடியார்களின் அடியாராக இருப்பதை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
மேலும், ஞானம் மற்றும் பக்தி வைராக்கியத்தை விரும்பும் பக்தர்கள், ஞானம் வைராக்கியத்தின் அடையாளமாக விளங்கும் கருடனை தரிசிப்பதன் மூலம் அனைத்துப் பாவங்களும் நீங்கி, ஆன்மிக முன்னேற்றம் பெறுவார்கள் என்ற செய்தியை கருட சேவை உணர்த்துகிறது.
கருட வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பனபாக லட்சுமி, பானு பிரகாஷ் ரெட்டி, கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.