இஸ்கான் நிறுவனர் பிரபுபாதா 
ஆன்மிகம்

கிருஷ்ண பக்தியை வளர்க்க பிரபுபாதா சொன்ன முக்கிய அறிவுரைகள்

இஸ்கான் இயக்கத்தின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நெருக்கமாக அழைத்து வரவேண்டும் என பிரபுபாதா கூறியிருந்தார்.

கிருஷ்ண உணர்வின் ஞானத்தை மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களிடம் பக்திநெறியை வளர்ப்பதற்காக ஸ்ரீல பிரபுபாதா, 1966 ஜூலை மாதம் இஸ்கான் (ISKCON) என்று அழைக்கப்படும் சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆரம்பித்தார். அச்சமயம் ஸ்ரீல பிரபுபாதா, இஸ்கான் நிறுவன ஆவணத்தில் இஸ்கானின் ஏழு முக்கிய குறிக்கோள்களை குறிப்பிட்டிருக்கிறார். அதனை பார்ப்போம்.

ஆன்மிக ஞானம்

1. உலகில் உண்மையான அமைதி மற்றும் ஒற்றுமை ஏற்படவும், வாழ்க்கையின் உயர்ந்த மதிப்பை உணராமல் செயல்படுவதை தவிர்க்கவும், ஆன்மிக ஞானத்தை முறைப்படி பரப்பி, ஆன்மீக வாழ்க்கையின் நுணுக்கங்களை பற்றி அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுப்பது.

2. இந்தியாவின் மிகப்பெரும் சாஸ்திரங்களான பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிட்டவாறு, கிருஷ்ண உணர்வை பரப்புவது.

3. இஸ்கான் இயக்கத்தின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நெருக்கமாக அழைத்து வருவது. இதன் மூலம் ஒவ்வொரு ஆன்மாவும் பகவான் கிருஷ்ணரின் அம்சம் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்வது.

4. பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களின் படி, சங்கீர்த்தன இயக்கத்தை, அதாவது பகவானின் புனித நாமத்தை ஒன்று கூடி உச்சரிப்பது, பாடி மகிழ்வது, மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது மற்றும் உற்சாகப்படுத்துவது.

கோவில்களை கட்டமைத்தல்

5. இஸ்கான் உறுப்பினர்களுக்காகவும் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும், பகவான் கிருஷ்ணரின் லீலைகள் அடங்கிய புனித ஸ்தலத்தை அமைத்தல்.

6. எளிமையான மற்றும் இயற்கையான வாழ்க்கை முறையை கற்றுக்கொடுப்பதற்காக உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது.

7. மேற்குறிப்பிட்ட நோக்கங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்காக, பத்திரிக்கைகள், இதழ்கள், புத்தகங்கள் மற்றும் பிற எழுத்தாக்கங்களை வெளியிட்டு, மக்களிடையே அவற்றை கொண்டு சேர்த்தல்.