இவ்வுலகில் துன்பங்களுக்கும், தீமைகளுக்கும் குறைவே இல்லை. அதிலும் குறிப்பாக நாம் யாருக்கு அதிக நன்மை செய்கிறோமோ அவர்களிடத்தில் இருந்து நமக்கு தீமை வருவதை காண்கிறோம். அதுபோலவே ஒருவருக்கு குறிப்பிட்ட காலம் நாம் நன்மை செய்துவிட்டு சில சூழ்நிலைகளால் நன்மையை தொடர முடியாமல் போகும்போது, அவர்களிடம் இருந்து நமக்கு எதிராக பொறாமையும், எரிச்சலும் வருவதை கண்கூடாக பார்த்திருப்போம்.
இது போன்ற சூழ்நிலைகளில் நாம் தீமைக்கு பதிலாக அவர்களிடம் அன்பை விதைக்க வேண்டும். அவர்களை நாம் ஆசீர்வதிக்க வேண்டும். நம்மை காயப்படுத்தியவர்களை திருப்பி காயப்படுத்தவும் அல்லது பதிலுக்கு பதில் செய்யவும் மனதளவில்கூட நினைக்கக் கூடாது.
இந்த நேரத்தில் நமக்குத் தேவைப்படுவது தெய்வீக அன்பு. இயேசுவின் அன்பு நமக்குள் இருந்தால் இது சாத்தியமாகும். இதைத் தான் இயேசு நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறார். நமக்கு தீமை செய்தவர்களை முதலில் மனப்பூர்வமாக நாம் மன்னிக்க வேண்டும். இரண்டாவது, அவர்களை மனப்பூர்வமாக ஆசீர்வதிக்க வேண்டும். மூன்றாவது, அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த அணுகுமுறைகள் நம்மை தீமைக்கு தீமை செய்யாமல் நம்மை ஒரு வெற்றியுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும்.
தீமைக்குத் தீமை செய்வது மிக எளிது. ஆனால், தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வது கடினமானது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் அன்பினால் இது நிச்சயமாக சாத்தியமாகும்.
வேதம் சொல்கிறது; “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு" (ரோமர் 12:21). "ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமல் போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்" (யாக். 4:17).
“கர்த்தாவே, நீர் என்னைக் கவனித்து, என்னோடு வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்." (எரேமியா 18:19)
பிரியமானவர்களே; தீமையின் குறிக்கோள் நம்மை பாவத்தில் வீழ்த்தி கடவுளுக்கும், நமக்கும் உள்ள தொடர்பை விட்டு நம்மைத் திசை திருப்புவதாகும். நம்மை துன்புறுத்தினவர்களையும் நாம் மன்னித்து ஆசீர்வதித்தால், அவர்கள் தங்கள் இலக்கில், இறுதியில் தோல்வி அடைவார்கள். எனவே, தனிநபர் மீதுள்ள வெறுப்பைவிட தெய்வீக அன்பு வலிமையானது. தீமையைவிட நன்மை சக்தி வாய்ந்தது. தீமைகளுக்கு பதிலாக நன்மை செய்து வந்தால், யார் என்ன செய்தாலும் நாம் அமைதியின் வழியில் நடக்கலாம்.
எனவே தைரியமாக, 'கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்' என்று சொல்லலாம். நம்முடைய வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதையை உறுதியாக பின்பற்றுவோம்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முழுவதுமே தீமைக்கு எதிராகத் தீமை செய்யாமல், அன்பையும் மன்னிப்பையும் வெளிப்படுத்திய ஒரு முன்னுதாரணமாகும். இயேசுவின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள், பகையை அன்பால் வெல்வது ஆகும்.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் கொடு." (மத்தேயு 5:39)
இயேசு தன்னைத் துன்புறுத்தியவர்களை ஒருபோதும் சபிக்கவில்லை. மாறாக, “உங்கள் எதிரிகளை நேசியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்" என்றார்.
தன்னைச் சிலுவையில் அறைந்த வேளையிலும், “பிதாவே, இவர்களை மன்னியும்; தாங்கள் செய்கிறது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று தன் வேதனையிலும் எதிரிகளுக்காக வேண்டிக்கொண்டார் இயேசு. மனிதர்களைப் போல பழிவாங்கும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல், நீதியை தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து அமைதி காத்தார். இயேசுவின் வழியில் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளும் நாமும் தீமைக்கு தீமை என்று எதிர்த்து நிற்காமல் நம்மை துன்பப்படுத்துபவர்களுக்கும், வேதனைப்படுத்துபவர்களுக்கும், இயேசுவிடத்தில் வேண்டுதல் செய்ய வேண்டும். சக மனிதர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்பதே வேதாகமத்தில் உள்ள பிரதான கட்டளையாகும்.
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. (மத்தேயு 22:37-39)
ஆகையால், நாம் தீமையை அன்பால் வென்று, வெற்றியின் பாதையில் வழி நடப்போம். அன்பின் பிதாவே, தீமைக்குப் பதில் தீமை செய்யாதபடி அவர்களுக்கு நன்மை செய்யக்கூடிய நல்மனதை கிருபையாய் எங்களுக்குத் தாரும். ஆமென்.
-டாக்டர் ஒய்.ஆர்.மானெக்சா, நெல்லை