திருப்பதி,
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வாக, கருட வாகன சேவை இடம்பெறும். அப்போது, திருமலை மலையப்ப சுவாமிக்கு, தமிழகத்தில் இருந்து 2 மங்கலப் பொருட்கள், தமிழக பக்தர்கள் சார்பில் காணிக்கையாக சமர்ப்பிக்கப்படும். அதில் ஒன்று, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் மாலை. மற்றொன்று சென்னையில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வணங்கி, பிரார்த்தனையுடன் அனுப்பி வைக்கப்படும் அழகிய வெண்பட்டுக் குடைகள்.
இந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், கடந்த 21 ஆண்டுகளாக திருமலை பிரம்மோற்சவம், கருட சேவைக்கு, ஸ்ரீ ஏழுமலையானுக்கு திருக்குடைகளை ஹிந்து தர்மார்த்த சமிதி சமர்ப்பித்து வருகிறது. அதன்படி, 22ம் ஆண்டு திருக்குடை ஊர்வலம், சென்னை, பூக்கடை சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் இருந்து, கடந்த 13ம் தேதி தொடங்கியது. கர்நாடகா மாநிலம் தீர்த்த ஹள்ளி ஸ்ரீ பீமன்னா கட்டே மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ரகுவரரேந்திர தீர்த்த சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அன்று மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டின. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, திருக்குடைகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். திருக்குடை ஊர்வலம், நேற்று முன்தினம் மாலை திருப்பதியை அடைந்தது. அங்கு திருச்சானுார் பத்மாவதி தாயார் கோயிலில் 2 திருக்குடைகள், தேவஸ்தானத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அதையடுத்து, திருக்குடைகள் நேற்று காலை திருமலை சென்றடைந்தன. அங்கு, மாட வீதிகளில் திருக்குடைகள் வீதி உலா வந்தன. பின்னர், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி, ஒன்பது அழகிய வெண்பட்டு திருக்குடைகளை தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். உடன் மலையப்ப சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
தேவஸ்தான செயல் அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச்.வெங்கையா சவுத்ரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அருகில், தேவஸ்தான தலைமை விஜிலென்ஸ் பாதுகாப்பு அதிகாரி கே.முரளிகிருஷ்ணா, திருப்பதி எஸ்பி எல்.சுப்பராயலு, தேவஸ்தான உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் தலைவர் ஸ்ரீதர் வர்மா, திருமலை கோயில் பேஷ்கார் ராமகிருஷ்ணா ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து, நிருபர்களிடம் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது;-
“ஆண்டுதோறும் திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவத்தில், தமிழக பக்தர்கள் சார்பில், இந்து தர்மார்த்த டிரஸ்ட், 11 அழகிய வெண்பட்டுக் குடைகளை சமர்ப்பணம் செய்து வருகிறது. இந்த ஆண்டு, 13-ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் சென்னையில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் இருந்து திருக்குடைகள் ஊர்வலம் தொடங்கியது. 5 நாள் யாத்திரையில் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை, இந்த திருக்குடைகள் மீது செலுத்தினார்கள்.
நேற்று (17ம் தேதி) 2 திருக்குடைகள், திருச்சானுார் பத்மாவதி தாயார் சன்னதியில் சமர்ப்பணம் செய்தோம். இன்று (நேற்று) 9 குடைகள், திருமலையில் சமர்ப்பித்தோம். அதை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். அதேபோல, ஆண்டுதோறும், திருக்குடை ஊர்வலம், விமரிசையாக நடந்து வருகிறது.
அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, பாதுகாப்பு அளித்த தமிழக போலீசாருக்கு நன்றி. திருக்குடைகள் சமர்ப்பணம் நிகழ்வுக்காக, நன்கொடை, உண்டியல் வசூல் யாரிடமும் பெறுவது கிடையாது. இதில் பங்கேற்ற எல்லாருக்கும் நன்றி. பக்தர்களின் பிரார்த்தனைகளை மலையப்ப சுவாமி ஏற்றுக் கொண்டு அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.