கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காகாடு கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா கடந்த மாதம் 26 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஒரு வார காலம் நவநாள் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கூட்டு பாடல் திருப்பலி பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் புனித அந்தோணியார், புனித சூசையப்பர் மற்றும் புனிதர்கள் எழுந்தருளினர். பின்னர் வாண வேடிக்கைகள், மேள தாளங்கள் முழங்க தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டன.
ஆங்காங்கே பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தேர்களை வரவேற்று வணங்கினர். இந்த ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
தேர் பவனியைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் கோட்டைக்காடு பங்குத்தந்தை பபியன் தலைமையில் அருட்தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் பங்கேற்ற கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.