பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் 
ஆன்மிகம்

புதுக்கோட்டை: வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

வைகாசி திருவிழாவின் ஒரு பகுதியாக, விரதம் இருந்த பக்தர்கள் பலர், பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், வயலோகத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா பூச்சொரிதல், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 24-ந்தேதி திருவிழா தொடங்கியது.

இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தினமும் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதேபோல் மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவிழாவையொட்டி முத்துமாரியம்மன் கோவிலுக்கு வயலோகம், குடுமியான்மலை, புதூர், குளவாய்ப்பட்டி மாங்குடி, மண்ணவேலாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.

இன்று பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல் கரும்பால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.