குடவாசல்,
திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புமிக்க சிவஸ்தலம் ஆகும். இங்கு நாளை ராகு- கேது பெயர்ச்சி விழா நடக்கிறது.
ஒருமுறை கயிலாயத்தில் சிவபெருமானை விநாயகப்பெருமான் வணங்கிக்கொண்டிருந்தபோது சிவபெருமானின் கழுத்தில் இருந்த நாகம், விநாயகர் தன்னையும் சேர்த்து வணங்குவதாக கர்வம் கொண்டதால், நாக பாம்பு இனங்கள் அனைத்தும் செயலற்று போக சாபமிட்டார் இறைவன்.
இந்த சாபத்தினால் பாம்பு இனங்கள் தங்களின் சக்தியை இழந்து ஆதிசேஷன் உள்ளிட்ட அனைத்து நாக இனங்களும் விமோசனம் வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்போது அவர்களுக்கான சாப விமோசனத்திற்கான வழியை சிவபெருமான் காட்டியருளினார்.
அதாவது, சிவராத்திரி அன்று முதல் கால பூஜையில் கும்பகோணம் நாகேஸ்வரனையும், இரண்டாவது காலத்தில் திருநாகேஸ்வரம் திருநாகேஸ்வரரையும், மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரரையும், நான்காவது காலத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கி சாப விமோசனம் பெறுமாறு கூறினார். அதன்படி பாம்பு இனங்கள் இந்த நான்கு தலங்களிலும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.
சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகுவும் கேதுவும் ஒரே உடல் அமைப்புடன் (ஏக சரீரம்) இறைவனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.
எனவே, இந்தக் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது.
வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நாளை நடைபெறுகிறது. நாளை மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடப்பெயர்கின்றனர்.
அதனை முன்னிட்டு ராகு கேது பகவானுக்கு மாலை 4 மணியளவில் ஆயிரம் லிட்டர் பால் மற்றும் பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. சரியாக மாலை 5.15 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இந்நிகழ்வில் திருவாரூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.