ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முகிழ்தகம் கிராமத்தில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலின் உப கோவிலான ஸ்ரீதேவி பூதேவி சமேத சொர்ண வருஷம் பெய்த பெருமாள் கோவில் உள்ளது. மிகப் பழமை வாய்ந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றன. நான்கு கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனைகள் இன்று காலையில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்கள் ஆலயத்தை வலம் வந்தன.
அதனைத் தொடர்ந்து சொர்ண வருஷம் பெய்த பெருமாள், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆலய கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் கருவறையில் மகா அபிஷேகமும் விசேஷ தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.