திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னப்பிரசாத வினியோகத்தில் காய்கறிகள் காணிக்கையாளர்களின் சேவை மிக முக்கியமானது, என தேவஸ்தான கூடுதல் அதிகாரி குறிப்பிட்டார்.
திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சுதர்மா கூட்டரங்கில் அன்னப்பிரசாதம் தயாரிப்புக்காக காய்கறிகளை காணிக்கையாக வழங்கும் தானதாரர்களுடன், திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆலோசனை நடத்தினார். வரவிருக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காய்கறிகள் வினியோகம், போக்குவரத்து, சேமிப்பு, பயன்பாடு, தரம், எதிர்கால தேவைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 5 மாதங்களாக தினமும் சுமார் 4 லட்சம் பேருக்கு அன்னப்பிரசாதம் (4 லட்சம் பரிமாறல்) வழங்கப்படுகிறது. இதற்காக தினமும் சுமார் 1,314 டன் அரிசி, 8 டன்னுக்கும் அதிகமான காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
25, 30 ஆண்டுகளாக ஆந்திரா, தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தானதாரர்கள் காய்கறிகளை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். தற்போது 3, 4 மாநிலங்களை சேர்ந்த சுமார் 30 தானதாரர்கள் 33 வகையான காய்கறிகளை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னப்பிரசாத வினியோகத்தில் காய்கறிகள் காணிக்கையாளர்களின் சேவை மிக முக்கியமானது.
அன்னப்பிரசாத தேவைகளுக்கு ஏற்ப எந்த நேரத்தில் எந்தக் காய்கறிகள் எவ்வளவு தேவை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, தானதாரர்களுடன் ஒருங்கிணைந்து காய்கறிகளை பெற்று வருகிறோம். இதன் மூலம் காய்கறிகளின் தரம், பேக்கிங், போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்களில் தானதாரர்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்கள்.
காய்கறிகள் விரைவில் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை சேமித்து பயன்படுத்தும் திட்டமிடல் அவசியம். குளிர்சாதனக் கிடங்கு வசதியைப் பயன்படுத்தி நீண்ட காலம் சேமிக்கக்கூடிய காய்கறிகளை உரிய முறையில் சேமித்து வருகிறோம். விரைவில் கெட்டுப்போகக் கூடிய காய்கறிகளை முதலில் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தினசரி சுமார் 5½ டன் காய்கறிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அது 8.44 டன்னாக அதிகரித்துள்ளது. அன்னப்பிரசாத வினியோகம் விரிவடைந்ததன் காரணமாக காய்கறிகளின் பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் காய்கறிகள் காணிக்கைக்காக தனிப்பட்ட கொள்கை, ஆன்லைன் ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த இடத்தில் இருந்து எந்தக் காய்கறி எவ்வளவு தேவை என்பதை நிகழ்நேரத்தில் ஆன்லைன் மூலம் தானதாரர்களுக்கு தெரிவித்து, அவர்களும் ஆன்லைனில் பதிலளிக்கும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டால் தகவல் பரிமாற்றம் மேலும் விரைவாகும்.
இதன் மூலம் மேலும் பல தானதாரர்கள் இந்த மகத்தான சேவையில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும். வரவிருக்கும் இரு பிரம்மோற்சவங்களிலும் காய்கறி தானதாரர்கள் முழுமையான உதவி, ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளனர்.
திருமலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 4½ லட்சம் பரிமாறல் வழங்கப்படுகின்றன. தினமும் சுமார் 19 மணி நேரம் அன்னதான சமையல் அறைகள் செயல்படுகின்றன. இவ்வளவு பெரிய அளவில் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியை நடத்துவது ஸ்ரீவாரியின் அருளால் மட்டுமே சாத்தியமாகிறது.
அன்னப்பிரசாதத்துக்காக காய்கறிகளை வழங்கி வரும் தானதாரர்களின் சேவைக்கு பாராட்டுகள். வரவிருக்கும் இரு பிரம்மோற்சவங்களை மேலும் சிறப்பாகவும், திறம்படவும் நடத்த அனைத்துத்துறைகளும், தானதாரர்களும், சேவை அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஒரு குழுவாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.