காசியபர், அத்ரி, பரத்வாஜர், விசுவாமித்ரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோர் சப்த ரிஷிகளாக போற்றப்படுகின்றனர். இந்த சப்த ரிஷிகளை போற்றி வழிபடவேண்டிய நாளாக 'ரிஷி பஞ்சமி' உள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை 'ரிஷி பஞ்சமி' என்று அழைக்கிறோம். இந்த நாளில் சப்த ரிஷிகளை போற்றி வழிபடுவது மிகுந்த பலன்களை தரும். அவ்வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு மறுநாளான இன்று (15.9.2026) ரிஷி பஞ்சமி தினம் ஆகும்.
ரிஷி பஞ்சமி நாளில் வயதான பெண்கள் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். சப்த ரிஷிகளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் பாவங்கள் மற்றும் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஒரு சமயம் இந்திரன், தன் குருவுக்கு செய்த துரோகத்தால் பதவி, ராஜ்ஜியம், செல்வம் போன்றவற்றை இழக்க நேரிட்டது. மேலும், தாமரைத் தண்டிற்குள் வசிக்கும் சாபத்தையும் பெற்றான். இதனால் மிகுந்த வேதனை அடைந்த இந்திரன், விஷ்ணு பகவானை நோக்கி வேண்டினான். விஷ்ணு பகவான், “உன் சாபத்தை யாராவது ஏற்றுக்கொண்டால், உனது தோஷம் நீங்கி இழந்த பதவி, ராஜ்ஜியம், செல்வம் அனைத்தும் கிடைக்கும்” என்றார்.
இதையடுத்து இந்திரன், தன்னுடைய சாபத்தை ஏற்றுக் கொள்ளும்படி பலரிடமும் கேட்டுக்கொண்டான். அதன்படி, மரம், நிலம், தண்ணீர், பெண் ஆகிய நான்கு பேரும் இந்திரனின் சாபத்தை ஏற்க முன்வந்தனர். இதன்மூலம் இந்திரனின் சாபம் நீங்கியது. இந்திரன் இழந்த பதவி, ராஜ்ஜியம், செல்வம் போன்றவற்றை மீண்டும் பெற்றான். தன்னுடைய சாபம் நீங்க காரணமாக இருந்த மரம், நிலம், தண்ணீர், பெண் ஆகிய நால்வருக்கும் வரம் அளித்தான்.
அதன்படி மரம், தன்னை வெட்டினாலும் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் வரம் பெற்றது. நிலம், வறண்டு போனாலும் மறுபடியும் தண்ணீர் பட்டதும் பசுமையாக மாறிவிடும் தன்மை பெற்றது. தண்ணீருக்கு எல்லாவித பொருட்களின் அசுத்தங்களையும் நீக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது. பெண்ணிற்கு மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்பட்டு, அதன்மூலம் தன்னுடைய அனைத்து தோஷங்களும் நீங்கி புனிதமாகும் வரம் கிடைத்தது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தோஷங்களை நீக்க 'ரிஷி பஞ்சமி' விரதம் உதவுகிறது.
விரதம் இருக்கும் பெண்கள், காலையில் நீர்நிலைகளில் நீராட வேண்டும். பின்னர், வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து, அதில் கலசங்கள் வைத்து, சப்தரிஷிகளையும், அருந்ததி தேவியையும் ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். சப்த ரிஷிகளுக்கு நைவேத்தியம் செய்ததை ஏழு பேருக்கு தானமாக வழங்க வேண்டும். மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். ரிஷி பஞ்சமி விரதத்தை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கடைப்பிடித்து வந்தால் துன்பங்கள் நீங்கும், மங்கலம் உண்டாகும், செல்வங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.
ரிஷி பஞ்சமி நாளில் சப்த ரிஷிகளோடு, அவர்களின் பத்தினிகளையும் பூஜிப்பதன் மூலம் பெண்களின் சாபமும், தோஷமும் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.