கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் கடந்த மாதம் ரூ.1.34 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
இங்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அன்னதான திட்டத்தை பக்தர்களின் நேரடி நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் திருக்கோவில் நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
அதேபோல கடந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், நாகர்கோவில் இந்து அறநிலையத் துறை ஆய்வாளர் சுஜித், ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் உள்ள நன்கொடை பணம் எண்ணப்பட்டது. இதில் மொத்தம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 992 இருந்தது.
இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 18 நிரந்தர உண்டியல்களும் இப்போது திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.