சகோபுர உற்சவம் 
ஆன்மிகம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் சகோபுர உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற திருநிலைநாயகி உடைனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் (சட்டைநாதர் கோவில்) அமைந்துள்ளது. இக்கோவிலில் சுவாமி, அம்பாள் 3 நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். திருக்கோவிலில் அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் காட்சியளித்து வருகின்றனர்.

இக்கோயிலின் சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று இரவு முக்குலத்தோர் மண்டகப்படி திருவிழாவான தெருவடைச்சான் எனப்படும் சகோபுர உற்சவம் நடைபெற்றது.

சகோபுர உற்சவம்

இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தர் சிறப்பு அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி, பஞ்ச மூர்த்திகளுடன் சகோபுரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சகோபுர உற்சவத்தை மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளர் வைபவ் வாண்டையார், ஸ்ரீமத் அண்ணாமலை தம்பிரான் முன்னிலையில் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர். சகோபுரம் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நாளை மறுநாள் (28 ம் தேதி) செவ்வாய்க்கிழமை திருத்தேர் நிகழ்ச்சியும், 30ம் தேதி வியாழக்கிழமை நடராஜர் உற்சவமும், 1ம் தேதி மௌன உற்சவமும், மூன்றாம் தேதி தெப்போற்சவமும், நான்காம் தேதி சண்டிகேஸ்வர உற்சவமும், 8ம் தேதி முத்து சட்டைநாதர் உற்சவமும் நடைபெற உள்ளது.