தேரோட்டம் 
ஆன்மிகம்

சேலம் கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம்

விழாவில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சேலம்,

சேலம் கோட்டை அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் பெருமாள் கோவிலில் வைகாசி தேர்த்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் மூலவர் பெருமாள், சுந்தரவல்லி தாயார், ஆதி வேணுகோபால சுவாமி, ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், சந்தன கோபால கிருஷ்ணர், விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமும், மாலையில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

தேரோட்டம்

இந்நிலையில், வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.45 மணிக்கு கோவிலில் இருந்து தேர் மண்டபத்திற்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாரை ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய பெருமாள், தாயாருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்த நாமம் எழுப்பியபடி பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ராஜகணபதி கோவில் எதிரில் இருந்து புறப்பட்ட தேரானது, 2-வது அக்ரஹாரம், முதல் அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக மதியம் 1.30 மணிக்கு மீண்டும் தேர் நிலையத்தை அடைந்தது.

அன்னதானம்

தேர்த்திருவிழாவில் சேலம் மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம், மோர், சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு கடை வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.