கோப்புப்படம் 
ஆன்மிகம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை மறுநாள் தொடக்கம்

ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

சமயபுரம்,

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தொடர்ந்து விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) அம்மன் வெள்ளிக்கு திரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 15-ந்தேதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், 16-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார்.

17-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. தேரோட்டம் முடிந்து 8-ம் நாளான 21-ந்தேதி இரவு அம்மன் தங்கக்கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.