சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் ஐந்து பெரும் உற்சவம் நடைபெறும். அதில் ஒன்று பஞ்சப்பிரகார உற்சவம் ஆகும். இந்த பஞ்சபிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். பஞ்சபூதங்கள், ஐம்பெரும் தொழில், ஐம்பெரும் கலை, ஐம்பெரும் பீடம் (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஸ்வர, சதா சிவம்) மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்தி) இவற்றை விளக்கும் தத்துவமாக பஞ்சபிரகார உற்சவம் நடத்தப்படுகிறது.
இந்த தத்துவத்தில் ஆண்டுதோறும் சமயபுரம் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பஞ்சப்பிரகார திருவிழா கடந்த மே 4ம் தேதி தொடங்கியது. 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை இரவில் அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் 11ம் நாளான நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சப்பிரகார உற்சவம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பட்டாச்சாரியார்கள் வட காவிரியில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் தீர்த்தம் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புனித நீரால் பஞ்சப்பிரகார மஹா அபிஷேகம் நடைபெற்றது.