சோழவந்தான்,
சோழவந்தான் வைகை நதி கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கி சுயம்புவாக சனீஸ்வர பகவான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இவ்விழாவில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து தங்களது பெயர் ராசி, நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று வெள்ளிக்கிழமை காலை 8.24 மணி அளவில் பூரட்டாதி மூன்றாம் பாதம் கும்பராசியிலிருந்து மீன ராசிக்கு சனீஸ்வர பகவான் பிரவேசித்தார். இதை முன்னிட்டு சோழவந்தான் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
விழாவை முன்னிட்டு சனிப் பெயர்ச்சி பரிகார யாகம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. நேற்று வியாழக்கிழமை இரவு நாகேஸ்வரன் தலைமையில் நவக்கிரக ஹோமம் சனிப்ரீத்தி பரிகார ஹோமம் நடைபெற்று பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை மங்கள இசை உடன் விக்னேஸ்வர பூஜை, வேதிகா அர்ச்சனை, சனீஸ்வரர் மூல மந்திரம் ஜபம், சனீஸ்வர தோஷ நிவர்த்தி பரிகார ஹோமம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ராமசுப்பிரமணியன் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை எடுத்து மேளம் தாளம் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் அந்த புனித நீரால் சனீஸ்வர பகவானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் சிறப்பு அலங்காரம், சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார அர்ச்சனை மற்றும் சாமி தரிசனம் செய்தனர்.