முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த விரத தினம் சதுர்த்தி ஆகும். விநாயகர் அவதரித்தது சதுர்த்தி திதியில் என்பதால் ஒவ்வெரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதிகள் அனைத்தும் விநாயகர் வழிபாட்டிற்குரிய நாட்கள்தான். இதில், தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.
'சங்கட' என்றால் துன்பம், 'ஹர' என்றால் அழித்தல். எனவே, அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடிய விரத தினமே சங்கடஹர சதுர்த்தி. இதனால்தான் பெரும்பாலான பக்தர்கள் வளர்பிறை சதுர்த்தியை விட, தேய்பிறை சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது வழக்கம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலையில் சந்திர உதயத்திற்கு பிறகு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு, சந்திர தரிசனம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்தால், எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அது விநாயகர் அருளால் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
அவ்வகையில் இன்று சங்கடஹர சதுர்த்தி நாளாகும். இன்று நாள் முழுவதும் சதுர்த்தி திதி உள்ளது. மாலை நேர வழிபாடு தான் சங்கடஹர சதுர்த்தி திதிக்கு உகந்தது என்பதால், இன்று மாலை நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
இன்று மாலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபடலாம். விநாயகரை வழிபட்டபின், கோவிலில் அமர்ந்து பிரார்த்தனைகள் மற்றும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சங்கடங்களை விநாயகரிடம் சொல்லி, இந்த சங்கடங்களை எல்லாம் தீர்த்து வைக்கும்படி மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டிலும் விளக்கேற்றி விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல் மாலையும் கொழுக்கட்டையும் படைத்து வழிபடலாம்.
சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபடுவதன்மூலம், வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் நீங்கி சௌபாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.