திருவாரூர்,
சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
தமிழகத்திலேயே கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவிக்கான ஒரே ஒரு தனிக்கோவில் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில் ஆகும். திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 12 தினங்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பல்வேறு அலங்காரங்களில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் சிகர நிகழ்வாக, சரஸ்வதி பூஜை நாளில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, காலை 10 மணி அளவில் பாத தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்று விநாயகப் பெருமான் திருவீதியுலா காட்சி நடந்தது.
10ம் நாளான இன்று விஜயதசமியை முன்னிட்டு காலை 6 மணி முதல் அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெள்ளை பட்டு உடுத்தி, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
விஜயதசமி என்பதால் இங்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் இருந்தும் பக்தர்கள் தங்களின் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்து தானியத்தில் ஓம், அ, ஆ, இ என்ற எழுத்துக்களை எழுத வைத்து கல்வியை துவக்கினர்.
இதேபோன்று கலைத்துறையைச் சார்ந்தவர்கள், தங்களின் குழந்தைகளுக்கு கலையை கற்றுக் கொடுக்கும் வகையில் முதன் முதலில் இங்கு பயிற்சியை துவங்கினர்.