பக்தோசித பெருமாள் வீதிஉலா 
ஆன்மிகம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் சித்திரை பெருவிழா- பக்தோசித பெருமாள் வீதிஉலா

சித்திரை பெருவிழா ஐந்தாம் நாள் விழாவில் பக்தோசித பெருமாள் மாட வீதிகளில் திருவீதி உலா வந்தபோது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சோளிங்கர்,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் சித்திரை பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5வது நாளில் நாச்சியார் திருக்கோலம் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி பக்தோசிதப் பெருமாள் சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் தங்க ஆபரணங்கள் மலர்மாலை பல வண்ண மலர்கள் கொண்டு நாச்சியார் திருக்கோலம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

பக்தோசித பெருமாள் வீதிஉலா

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தோசிதப் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க சன்னதி தெரு, சுப்பாராவ் தெரு, பைராகி மடத்தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட 8 மாட வீதிகளில் உலா வந்து பொதுமக்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். சுவாமிக்கு வீடுதோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர். இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.