மதுரை,
கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர்மறை மாவட்டம், வடக்கு மறை வட்டம், தெற்கு மறை வட்டம் என இரண்டு பிரிவுகளாக உள்ளன. இதில் தெற்கு மறை வட்ட அளவிலான ஒருங்கிணைந்த சிலுவைப்பாதை வழிபாடு மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தெற்கு மறைவட்ட அதிபரும், டவுன்ஹால் ரோடு தூய ஜெப மாலை அன்னை ஆலய பங்குத்தந்தையுமான அமல்ராஜ் தலைமை தாங்கினார்.
ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய பங்கு தந்தை ஜோசப் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், தெற்கு மறைவட்டத்துக்கு உட்பட்ட பங்குகளான புனித வளனார் ஆலயம், கீழவாசல் தூய மரியன்னை பேராலயம், ஐராவதநல்லூர், பழங்காநத்தம், எல்லீஸ் நகர், ரெயில்வே காலனி, திருநகர், திருமங்கலம், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயம், நாகமலை புதுக்கோட்டை, கருமாத்தூர் உள்ளிட்ட பங்கு ஆலயங்களை சேர்ந்த இறை மக்கள் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாட்டினை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ராஜா தலைமையில், பங்கு அருட்பணி பேரவையினர், அன்பியங்களைச் சேர்ந்த இறை மக்கள் செய்திருந்தனர்.