சீர்காழி ரயிலடி மார்க்கோனி மந்திராலயா கார்டன் முருகன் கோவிலுக்கு காவடிகள் எடுத்துச் சென்ற பக்தர்கள் 
ஆன்மிகம்

சீர்காழி: முருகன் கோவில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் கீழ்பழனி என்கின்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மதியம் தீபாராதனை நிகழ்ச்சியைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பால்குடம், பால்காவடி, அலகு காவடி, பறவை காவடிகளுடன் வாணவேடிக்கை மேளதாளங்கள் முழங்க வீதி உலா காட்சி நடைபெற்றது.

இதே போல் சீர்காழி மார்கோனி மந்திராலயா கார்டனில், வேல்வடிவில் அமைந்துள்ள முருகன் கோவிலில் வேல்முருகனுக்கு தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது. காலையில் பக்தர்கள் காவடி, பால்குடங்கள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தனர். பின்னர் வள்ளி தெய்வானை சமேத வேல் முருகனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் இ.மார்கோனி மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

இதேபோல் வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள வைத்தியநாத ஸ்வாமி கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் பழனி ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக ஆட்கொண்ட விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். அதன் பின்னர் பழனி ஆண்டவருக்கு 21 வகையான நறுமண திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.