திருக்கல்யாண வைபவம் 
ஆன்மிகம்

சீர்காழி: ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்- சிவஜோதி தரிசனம்

திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் மற்றும் சிவஜோதி தரிசன நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோக தியாகேசர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில், தோத்திரபூர்ணாம்பிகையுடன் திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமாகிய ஐதீக வரலாற்று நிகழ்வானது, இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில் நடைபெறும்.

திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்கள்

திருக்கல்யாணம்

அவ்வகையில் இந்த ஆண்டு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் திருவீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு ஊஞ்சல் உற்சவம் செய்விக்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள், தோத்திர பூர்ணாம்பிகைக்கு மங்கல நாண் அணிவித்து திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் உலக நன்மைக்காக பக்தர்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். திருக்கல்யாண வைபவ நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கண்விழித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அதிகாலை சிவஜோதி தரிசனம் நடைபெற்றது.