சிவகிரி,
தென்காசி மாவட்டம், சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மூன்று நிலை ராஜகோபுரம், மூலஸ்தானம் விமானம், சுவாமி, அம்பாள் விமானங்கள். ஸ்ரீ சண்முகர் மண்டபம், ஸ்ரீ முத்துக்குமாரசாமி மண்டபம், சாலை கோபுரம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட் டன.
திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த 21-ந்தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்றைய தினம் மாலை முதல் கால யாகசாலை பூஜையும், 22-ந்தேதி 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அதில் சுவாமிநாத சிவாச்சாரியார் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் கணபதி சுந்தர குருக்கள் உட்பட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர்
நேற்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு விமானம், மூலவர் கோபுரம் மற்றும் அனைத்து கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு விநாயகர், மூலவர், சுந்தரேஸ்வரர், மீனாட்சி, முத்துக்குமாரசுவாமி, சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.