திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா கடந்த 26ஆம் தேதி மலைக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சுவாமி மலையில் இருந்து அடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேல் மற்றும் சேவற்கொடி கொண்டு, தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காலை 6 மணியளவில் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளினார்.
மாலை 4.15 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘அரோகரா கோஷங்கள்’ எழுப்பியபடி வடம்பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் மத்தியில் கிரிவல பாதையில், திருத்தேர் உலா வந்தது.
300 மீட்டர் தூரம் இழுக்கப்பட்டு மாலை 4.45 மணிக்கு தேர் முதல்நிலையில் நிறுத்தப்பட்டது. தேரில் எழுந்தருளிருக்கும் சுப்பிரமணியசுவாமிக்கு ஆராதனைகள் காட்டப்பட்டு தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் நாளை மாலை இரண்டாம் நாள் தேரோட்டம் நடைபெறும்.