ஹரித்வார்,
பொதுவாக அமாவாசை நாட்களில், இந்துக்கள் புனித நீர்நிலைகளில் நீராடுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி நீர் நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தல், பித்ரு பூஜை செய்தல் போன்ற கடமைகளையும் செய்வார்கள்.
அவ்வகையில் சோமவதி அமாவாசையும் மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிக்கும். அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் ஒன்றாக வரும் நாள் சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் முன்னோர் வழிபாடு, கங்கை போன்ற புனித நதிகளில் நீராடுதல் மற்றும் அரச மரத்தை சுற்றி வந்து பூஜை செய்தல் போன்ற வழிபாடுகள் மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக வட மாநிலங்களில் சோமவதி அமாவாசை வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அவ்வகையில் இன்று சோமவதி அமாவாசை தினத்தை முன்னிட்டு கங்கை போன்ற புனித நீர்நிலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜ் போன்ற இடங்களில் உள்ள கங்கை நதிக்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள 'ஹர் கி பௌரி' படித்துறை புனிதமான படித்துறை ஆகும். கங்கை நதியானது மலைப்பகுதியிலிருந்து வெளியேறி சமவெளிப் பகுதிக்குள் நுழையும் இடமாக இது கருதப்படுகிறது. சோமவதி அமாவாசையை முன்னிட்டு இங்கு ஏராளமான மக்கள் புனித நீராடினர். இதேபோல் கோவில்களிலும் பக்தர்களின் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.