ஸ்ரீகாளஹஸ்தி,
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில், கனக துர்க்கை அம்மனுக்கு பல்வேறு காய்கறிகளால் 'சாகம்பரி' அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜை நடந்தது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில், துணை கோவில்களில் கடந்த 10 நாட்களாக தசரா நவராத்திரி உற்சவம் நடந்தது. மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரே கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் கோவில் வளாகத்தில் வீற்றிருக்கும் கனக துர்க்கையம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் கனக துர்க்கையம்மனுக்கு சாந்தி அபிஷேகமும், பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. நேற்று கனக துர்க்கை அம்மனுக்கு பல்வேறு காய்கறிகளால் 'சாகம்பரி' அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜை நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதேபோல் கோவில் வளாகத்தில் வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்திக்கு நேற்று வியாழக்கிழமை என்பதால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முன்னதாக குருதட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கருணா குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேகமும், பல வண்ண மலர்களால், கொண்டை கடலை மாலையால் அலங்காரம் செய்யப்பட்டு தீபதூபம் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.