திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை போகி தேரோட்டம் நடந்தது. பெரிய போகி தேரில் உற்சவர்களான சோமாஸ்கந்த மூர்த்தியும், சிறிய போகி தேரில் உற்சவர் காமாட்சி தாயாரும் எழுந்தருளி திருப்பதி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
போகி தேர்களுக்கு முன்னால் பக்தி பஜனைகளை பக்தர்கள் பாடினர். கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடந்தன. கேரள செண்டை மேளம், பாரம்பரிய மங்கள இறை இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான சோமாஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயாருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறு போன்றவற்றால் அபிஷேகமும், பலவண்ண மலர்களால் அலங்காரமும், சிறப்புப் பூஜைககளும் செய்யப்பட்டன.
பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை நந்தி வாகன வீதிஉலா நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக நேற்று இரவு மகா சிவராத்திரி உற்சவம் நடந்தது. தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசன வரிசைகள், தற்காலிக நிழற்குடில்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலையில் புருஷா மிருக வாகனத்தில் சோமாஸ்கந்தர், காமாட்சி தாயார் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை தேரோட்டம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. இன்று காலையில் சக்கரஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.