சேஷ வாகன வீதியுலா 
ஆன்மிகம்

திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம்.. சேஷ வாகன வீதியுலா

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் பக்தி பஜனை, கோலாட்டங்கள் என கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

திருப்பதி:

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் மகர வாகனத்தில் உற்சவர்களான சோமாஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளி திருப்பதி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வாகன வீதிஉலா முன்னால் பக்தி பஜனை, கோலாட்டங்கள் நடந்தன. கேரள செண்டை மங்களம் உள்ளிட்ட இறை இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

இதேபோல் இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சர்வ பூபால வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளிய காட்சி

சீனிவாசமங்காபுரம்

அதேபோல் திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை கற்பகவிருட்ச வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் 'ராஜமன்னார்' அலங்காரத்தில் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், பகாசுர வதம் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.