ஸ்ரீரங்கம்,
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் வாகன சேவை, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
அவ்வகையில் விழாவின் நான்காம் நாளான நேற்று காலையில் இரட்டை பிரபை வாகன சேவை நடைபெற்றது. மாலையில் கருட வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஐந்தாம் நாளான இன்று காலையில் சேஷ வாகன சேவை நடைபெற்றது. இதற்காக ஸ்ரீநம்பெருமாள் இன்று அதிகாலை கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து சேஷ வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கிருந்து பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள், வழிநடை உபயங்கள் கண்டருளி பட்டுநூல்காரர் ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார்.
ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6.00 மணிக்கு அனுமந்த வாகனத்தில் புறப்படும் ஸ்ரீநம்பெருமாள், சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இரவில் வாகன மண்டபத்திற்கு சென்று, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைகிறார். வாகன சேவையை முன்னிட்டு இன்று விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டது.