ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் வாகன சேவை, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
அவ்வகையில் ஐந்தாம் நாளான நேற்று காலையில் சேஷ வாகன சேவை நடைபெற்றது. மாலையில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். ஆனால், மழை காரணமாக வீதியுலா செல்லாமல் கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நிறைவில் நம்பெருமாளுக்கு திருவந்திக்காளப்பு நடந்தது.
விழாவின் 6ம் நாளான இன்று (11.05.2026) அதிகாலை ஸ்ரீ நம்பெருமாள், தங்க ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் வாகன மண்டபம் சென்றடைந்த நம்பெருமாள் அங்கிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நாகப்பிள்ளை ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார்.
மாலை 6 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபத்தை அடைகிறார். அங்கிருந்து இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பின்னர் மீண்டும் யானை வாகன மண்டபத்தை அடைகிறார். இரவு 10 மணிக்கு உள் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.
இன்று அதிகாலையில் நடைபெற்ற வாகன சேவையை முன்னிட்டு விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டது. இரவு 8.30 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை.