திருச்சி,
ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவா் பெரிய பெருமாளுக்கு சாற்றப்பட்டிருந்த தைலக்காப்பு உலர்ந்ததையடுத்து திருவடியை இன்று முதல் தரிசனம் செய்யலாம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவா் பெரிய பெருமாளின் திருமேனி சுதையினால் செய்யப்பட்டது. எனவே, அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக ஆண்டுக்கு இரு முறை தைலக்காப்பு சாற்றப்பட்டு திருமனி பாதுகாக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின்போது முதல் தைலக்காப்பு சாற்றப்பட்ட நிலையில், திருப்பவித்ரோற்சவ விழா நிறைவடைந்த மறுநாள், இரண்டாவது தைலக் காப்பு சாற்றப்பட்டது.
அகில் கட்டை, பச்சைக் கற்பூரம், வெட்டிவோ் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள், மூலிகை பொருள்கள் கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் தைலம் பெரிய பெருமாளின் திருமேனி முழுவதும் சாற்றப்பட்டது. இதையடுத்து பெருமாளின் திருமுகத்தைத் தவிர, மற்ற உடல் பாகங்கள் மற்றும் திருவடி ஆகியவை மெல்லிய துணியால் திரையிடப்பட்டு மறைக்கப்பட்டது. திருமகம் மட்டுமே சேவையாகி வந்தது. திருவடி தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தைலக் காப்பு உலா்ந்த பின் பெரிய பெருமாளின் திருமேனி முழுவதையும் பக்தா்கள் தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தைலக்காப்பு உலர்ந்துவிட்டதால் இன்று முதல் பெருமாளின் திருவடியை தரிசனம் செய்யலாம். பெருமாளின் திருமேனியை மூடியிருக்கும் திரை இன்று மாலையில் அகற்றப்படும். மாலை 4 மணி முதல் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.