ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

8-ம் நாளான நேற்று தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நடை பெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

அந்த வகையில் விழாவின் 8-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் ரெங்கவிலாச மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி, இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையை அடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் 4.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.

சிறப்பு பூஜைகளுக்குப் பின் காலை 6 மணிக்கு அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘ரங்கா ரங்கா’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து வருகின்றனர். திருத்தேர் 4 வீதிகளிலும் வலம் வரும். தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் 500-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 16-ம் தேதி ஆளும் பல்லக்குடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.