திருச்சி,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இந்த மாதம் உண்டியல்களில் பக்தர்கள் ரூ.75 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக இந்த கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 75,69,761/- ரொக்கம் இருந்தது. மேலும் தங்கம் 34.100 கிராம், வெள்ளி 458.900 கிராம் மற்றும் 198 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நம்பெருமாள் பவித்ரோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 7 மணிக்கு திருவாராதனம் தொடங்கியது. காலை 10 மணிக்கு மூலஸ்தானம் திருவாராதனம் நடைபெற்றது.
பிற்பகல 2 மணிக்கு மேல் மூலவர் பெரியபெருமாள் பூச்சாண்டி சேவை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இரவு 8 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் சுவாமி நம்பெருமாள், இரவு 8.15 மணிக்கு பவித்ரோற்சவ மண்டபத்தை அடைகிறார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளி, 9.45 மணியளவில் புறப்பட்டு, இரவு 10.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைகிறார்.