தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் முதலாவது கோவிலாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம்12 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவத்திற்கான கொடியேற்றம் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்றது.
திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி கள்ளபிரான் கொடி மரம் சுற்றி புறப்பாடும் மாலையில் தோளிக்கினியானில் மாடவீதி வீதி புறப்பாடும் நடைபெற்றது. ஜனவரி 28ம் தேதி இரவு கருடசேவை நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு கொடிமரம் சுற்றி புறப்பாடு நடைபெற்றது.
நத்தம் எம்இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினிவேந்தன் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் வந்தனர். பின்னர் மூன்று பெருமாள்களுக்கும் பகல் 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12 மணிக்கு தீபாராதனையைத் தொடர்ந்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவிக்கப்பட்டது. பின்னர் தீர்த்தம், சடாரி, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை, உற்சவர் கள்ளப்பிரான், உற்சவர் எம்இடர் கடிவான், உற்சவர் காய்சினிவேந்தன் ஆகியோர் தோளிக்கினியானில் 7.30 மணிக்கு தெப்பக்குளம் நோக்கி புறப்பட்டனர். இரவு 8 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி, நத்தம் எம்இடர்கடிவான் திருப்புளியங்குடி காய்சினி வேந்தப் பெருமாள் ஆகிய சுவாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் வலம் வந்தனர். தெப்பக்குளக்கரையில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இரண்டாம் நாளாக இன்றும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இன்று இரவு கள்ளபிரான் சுவாமி மோகினி அலங்காரத்தில் தயார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.