பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் 
ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவ விழா.. பக்தர்கள் பாதுகாப்பாக, சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு: அதிகாரி தகவல்

திருமலை, திருப்பதியின் முக்கிய சந்திப்புகள் மற்றும் பகுதிகளில் பக்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் பல மொழிகளில் அறிவிப்புப் பலகைகள், திசை காட்டிப் பலகைகள் நிறுவப்பட உள்ளன.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்கள் பாதுகாப்பாக, எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும் 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று பிரம்மோற்சவ விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. போலீஸ் அதிகாரிகள், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரிகளுடன் திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முந்தைய ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களை கருத்தில் கொண்டு, திருமலையில் உள்ள நான்கு மாட வீதிகள், முக்கியமான பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படையினர் போலீசாருடன் இணைந்து விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சந்திரபாபு நாயுடு பங்கேற்கிறார்

பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் அன்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு திருமலைக்கு வருகிறார். அதையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள், தடுப்புக் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எதிர்பார்க்கப்படும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, தரிசன வரிசைகள், பக்தர்கள் நுழையும், வெளியேறும் வழிகள் ஆகியவை மேலும் வலுப்ப டுத்தப்பட உள்ளன. கோவிலில் நடக்க உள்ள பிரம்மோற்சவ விழாவின்போது, பக்தர்கள் பாதுகாப்பாக, எந்தவித சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

திசைகாட்டி பலகைகள்

குறிப்பாக கருட சேவையின்போது ஏற்படும் அதிக பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, திருமலை, திருப்பதியில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் முன்கூட்டியே ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திருமலை, திருப்பதி நகரங்களின் முக்கிய சந்திப்புகள் மற்றும் பகுதிகளில் பக்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் பல மொழிகளில் அறிவிப்புப் பலகைகள், திசை காட்டிப் பலகைகள் நிறுவப்பட உள்ளன.

இந்தப் பாதுகாப்புத் திட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு. போக்குவரத்து ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை, காவல், தீயணைப்பு, வனம், உளவு, போக்குவரத்துக்கழகம், ரெயில்வே ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நட வடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT