திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி 
ஆன்மிகம்

திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு

சக்கரஸ்நானத்தின் புனிதத்தன்மை நாள் முழுவதும் நீடிக்கும் என்பதால், பக்தர்கள் எவ்வித அவசரமுமின்றி, நாள் முழுவம் சுவாமி புஷ்கரணியில் புனித நீராடலாம்.

திருமலை,

திருப்பதியில் நடைபெற்ற நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் வாகன சேவை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமிடி தனித்து, தேவியர்களுடனும் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 8-ம் நாளான நேற்று காலையில் தங்கத் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. தங்கத் தேரில் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் அஸ்வ வாகன சேவை (குதிரை வாகனம்) நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், கல்கி அவதார திருக்கோலத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இந்து சமய நூல்களின்படி, குதிரையானது ஐம்புலன்களைக் குறிக்கிறது. மனித உடல் ஒரு தேராகவும், அறிவு தேரோட்டியாகவும், மனம் கடிவாளமாகவும், ஐம்புலன்கள் குதிரைகளாகவும் உருவகப்படுத்தப்படுகின்றன. பரம்பொருளான இறைவனே, அடங்காத இந்த ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் சக்தியாவார். எனவே, குதிரை வாகனத்தின் (அஸ்வ வாகனம்) மீது எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தரிசிப்பது என்பது, அலைபாயும் புலன்களைக் கட்டுப்படுத்தி, பரமாத்மாவைத் தம் இதயத்தில் நிலைநிறுத்துவதைக் குறிக்கிறது.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

விழாவின் நிறைவு நாளான இன்று, சுவாமி புஷ்கரணியில் (தெப்பக்குளம்) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக புஷ்கரணிக்கு வருகை தந்தனர். அங்கு பல்வேறு திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம், ஆரத்தி நடைபெற்றது.

அதன்பின் சக்கரத்தாழ்வாரை மூன்று முறை புஷ்கரணியில் மூழ்கச் செய்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது புஷ்கரணியின் நான்கு புறமும் திரண்டிருந்த பக்தர்கள், புனித நீராடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சேவகர்கள் பலர் பங்கேற்றனர்.

நாள் முழுவதும் புனித நீராடலாம்

இந்த நிகழ்வில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா பேசுகையில், நவராத்திரி பிரம்மோற்சவங்களைச் சிறப்பாக நடத்துவதற்கு மிகச்சிறந்த சேவைகளை வழங்கிய அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், கண்காணிப்புப் பிரிவு, காவல்துறை, மாவட்ட அதிகாரிகள் மற்றும் ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், சக்கரஸ்நானத்தின் புனிதத்தன்மை நாள் முழுவதும் நீடிக்கும் என்று குறிப்பிட்ட அவர், பக்தர்கள் எவ்வித அவசரமுமின்றி, படிப்படியாக சுவாமி புஷ்கரணியின் புனித நீரில் நீராடுமாறு கேட்டுக்கொண்டார்.

SCROLL FOR NEXT