தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில். சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடப்பது வழக்கம். பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று கிரிவலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 6.30 கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவல பாதையில் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கிரிவலம் வந்தனர்.
பின்பு உலக நன்மைக்காக பக்தர்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை நடத்தினர். கூட்டு பிரார்த்தனையில், "வளைகுடா போரை முடித்துவைப்பாய் தோரணமலை முருகா; வளைகுடா போரில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை காப்பாய் தோரணமலை முருகா; இந்தியாவுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி கிடைக்க அருள்வாய் தோரணமலை முருகா;
தமிழகம் உள்பட ஐந்து மாநில தேர்தலை அமைதியாய் சிறப்பாய் நடத்தி வைப்பாய் தோரணமலை முருகா; கோடை வெயிலில் இருந்து மக்களை காப்பாய் தோரணமலை முருகா; மாணவர்களுக்கு கோடை விடுமுறை பயனுள்ளதாய் அமைய அருள்வாய் தோரணமலை முருகா; கிரிவலம் வந்த பக்தர்களை ஏற்றம் பெற வைப்பாய் தோரணமலை முருகா; நாடி வந்த பக்தர்களுக்கு நல்லருள் அருள்வாய் தோரணமலை முருகா; மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற அருள்வாய் தோரணமலை முருகா" என்று வேண்டப்பட்டது.
இதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. காலை, மதியம் அன்னதானம் நடைபெற்றது. நேற்று பங்குனி உத்திரத்தை யொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து. வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.