சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் 
ஆன்மிகம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுவாமி மீது சூரிய கதிர்கள் விழும் நிகழ்வு.. இன்று மாலையில் தரிசனம் செய்யலாம்

பங்குனி மற்றும் புரட்டாசி மாதத்தில் சூரிய ஒளி கதிர்கள் கோவில் கருவறை வரை பாய்ந்து, உற்சவர் மற்றும் மூலவரின் திருமேனியை தழுவிச்செல்லும் அதிசயம் நடைபெறும்.

கன்னியாகுமரி,

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று மாலை சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழும் நிகழ்வு நடக்கிறது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். குறிப்பாக, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இதனால் தீவிர பக்தர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் கோவில்களில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.

திருவட்டாரில் குவிந்த பக்தர்கள்

அவ்வகையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலிவல் காலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மதியம் ஸ்ரீபலி பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு நடந்தது. மதியம் சிறப்பு அன்னதானம் நடந்தது. தொடர்ந்து ஆதிகேசவ பக்தர் சங்க அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விடுமுறை தினமான இன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பகவானை வழிபடுகின்றனர்

பெருமாள் திருமேனியில் சூரிய கதிர்கள்

பங்குனி மற்றும் புரட்டாசி மாதத்தில் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மாலையில் மறையும் சூரிய ஒளி கதிர்கள் கோவில் கருவறை வரை பாய்ந்து, உற்ச மூர்த்தி மற்றும் சயனகோலத்தில் காட்சி தரும் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியை தழுவிச்செல்லும் அதிசயம் நடைபெறும்.

அதன்படி புரட்டாசி 3-ம் நாளான இன்று (20.9.2026) மாலை மறையும் சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் சபா மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டப பகுதியைத் தாண்டி கருவறையில் பள்ளிகொண்ட பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு நடைபெறும். இன்று மாலை முதல் வரும் 26-ம் தேதி வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் திருமேனியில் விழும் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வை மாலை 5.45 மணியிலிருந்து 6.15 மணி வரை காணலாம்.

SCROLL FOR NEXT