திருச்செந்தூர்,
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கின்றனர்.
அவ்வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள், சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை என அனைத்து வழிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
விடுமுறை தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தன.