சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்கள் 
ஆன்மிகம்

விடுமுறை தினம்.. திருவண்ணாமலையில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும்.

அவ்வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு சென்ற பக்தர்களின் வரிசையானது வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது. மேலும் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள காத்திருப்பு கூடத்தில் பக்தர்கள் காத்திருந்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர்.

நேற்று பகலில் வெயிலின் அளவு அதிகமாகவே காணப்பட்டது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று பகலில் வெயிலின் தாக்கத்தினால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. பின்னர் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.