மெலட்டூர்,
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லைவனநாதர் திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 21ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. வைகாசி உற்சவ விழாவில் தினசரி சுவாமி - அம்பாள் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
7-வது நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை சுவாமி முல்லைவனநாதருக்கும் அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சுவாமி -அம்பாளுக்கு பெண்கள் சீர்வரிசை தட்டு, தாம்பூலம் எடுத்து கோவில் வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சகல சம்பிராதாயங்கள், அக்னி ஹோமங்கள் வார்க்கப்பட்டு ஆகம விதிகள்படி சுவாமி -அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர். ஜூன் 1ந்தேதி வரை திருவிழா நடைபெறும்