ஆன்மிகம்

சந்திர கிரகணத்தையொட்டி இன்று கோவில்களில் நடைஅடைப்பு

சந்திர கிரகணம் பிற்பகல் 3.20 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.48 மணிக்கு முடிவடைகிறது.

மதுரை,

இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் பிற்பகல் 3.20 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.48 மணிக்கு முடிவடைகிறது. எனவே மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் இன்று மாலை 5 மணிக்கு மத்திம காலதீர்த்தம் கொடுக்கப்பட்டு சந்திரசேகர் புறப்பாடு நடைபெற்று மாலை 6.48 மணிக்கு தீபாராதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை 8.20 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது என்றும், இந்த நேரத்தில் பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை என்றும், இரவு 7.30 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீசுவரர், தென் திருவாலவாய சுவாமி கோவில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லத்தம்மன் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், காலபைரவர் கோவில் உள்ளிட்ட உபகோவில்களில் காலை 8.20 மணிக்கு நடை சாத்தப்பட்டு, கிரகண நேரம் முடிந்த பின்னர் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணத்தையொட்டி இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைஅடைக்கப்பட உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை பிற்பகலில் இருந்து மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படுகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் காலை 8.20 முதல் இரவு 7.30 வரை மூடப்படுகிறது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில், நாள் முழுவதும் நடை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை நடை சாத்தப்படும்.

இதேபோல திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை காலை 9 மணிக்கு சாத்தப்பட்டு இரவு 7.30 மணிக்கு திறக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கிரகணம் முடிந்ததும் அனைத்துக் கோவில்களிலும் பரிகார பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.