தென்காசி,
தென்காசி, சங்கரன்கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர், சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருக்கல்யாண திருவிழாவையொட்டி நேற்று தபசு காட்சி நடைபெற்றது.
தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான காசி விஸ்வநாதர் உலகம்மன் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், சப்பர வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு கோவிலின் ரத வீதியில் வைத்து தபசு காட்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் வைத்து திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்றது.
இதேபோல் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஐப்பசி திருக்கல்யாணம் 11-ம் நாளான நேற்று மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் காலை 11.45 மணிக்கு கீழ ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 5.40 மணிக்கு கோமதி அம்பாளுக்கு. ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் கீழ ரதவீதி தேர் நிலையம் அருகே காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வருதல், மாலை மாற்றும் நிகழ்ச்சி, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 9.45 மணியளவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 12-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) சுவாமி, அம்பாள் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது.