ஆன்மிகம்

தை பவுர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 6 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 6.13 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர். நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் நேற்று தைப்பூசம் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதற்கிடையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் தரிசனத்திற்கு சென்ற வரிசை கோவில் அருகில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவில், பூத நாராயண பெருமாள் கோவில் வழியாக பெரிய தெருவில் நீண்டு காணப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய 6 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வந்தனர்.

முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 வரை பவுர்ணமி இருந்ததால் நேற்று முன்தினம் முதல் இன்று காலை வரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு தீயணைப்புத் துறையினர் தீத்தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சவுதி அரேபியா சென்ற அஜித் தோவலுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு

2025-ல் இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் ரூ.14.06 லட்சம் கோடி

இரு விமானங்கள் உரசி விபத்து.. மும்பையில் பரபரப்பு

மணிப்பூர்: பா.ஜ.க. மூத்த தலைவர் கேம்சந்த் சிங் புதிய முதல்-மந்திரியாகிறார்

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது; சபாநாயகருக்கு ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்