சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் 
ஆன்மிகம்

சேலம் செவ்வாய்ப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா கோலாகலம்

தைப்பூச நாளில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

முருகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த முக்கியமான தினங்களில் ஒன்று தைப்பூசத் திருநாள். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாகச் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்கிறார்கள். தைப்பூசத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கும், தீராத பகை மாறும், ஒற்றுமை அதிகரிக்கும், தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அவ்வகையில் இந்த ஆண்டு நேற்று முன்தினம் (01.02.2026) தைப்பூச பெருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை

சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை சித்திரைச் சாவடியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலும் தைப்பூச பெருவிழா நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு ஷண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அழகிய அலங்காரம் மற்றும் விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

“துன்பங்களைப் போக்கி நமக்கு இன்பத்தை அளிக்கும் முருகப்பெருமான், நம்மை அனைத்து தீமைகளிலிருந்தும் காக்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறார்” என கோவில் குருக்கள் சுப்பிரமணிய சுவாமிகள் மற்றும் சேனாபதி குருக்கள் தெரிவித்தனர்.